தமிழகம்–கேரளா இடையே புல்லட் ரயில் திட்டத்தை முன்னெடுக்க, இரண்டு வழித்தடங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்க அனுமதி வழங்குமாறு ரயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

நாடு முழுவதும் அதிவேக ரயில் போக்குவரத்தை விரிவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தற்போது 17 வழித்தடங்களில் புல்லட் ரயில் திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மும்பை–ஆமதாபாத் வழித்தடத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் ஹைதராபாத்–சென்னை, மைசூரு–சென்னை போன்ற வழித்தடங்களில் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, கேரளாவை இணைக்கும் அதிவேக வழித்தடங்களை தமிழக அரசு உத்தேசித்துள்ளது.

இதன் கீழ், சென்னை–திருச்சி–நாகர்கோவில்–திருவனந்தபுரம் மற்றும் சென்னை–சேலம்–கோவை–எர்ணாகுளம் ஆகிய இரண்டு வழித்தடங்களுக்கு டிபிஆர் தயாரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.

மேலும், விஜயவாடா வரை திட்டமிடப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சரக்கு போக்குவரத்து வழித்தடத்தை சென்னை–தூத்துக்குடி–கன்னியாகுமரி வரை நீட்டிக்கவும், அதற்கான டிபிஆர் தயாரிக்க அனுமதி வழங்கவும் தமிழக அரசு கோரியுள்ளது.