நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானின் உச்ச தலைவர் பதவி தன்னைத் தேடி வந்ததாக கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டனில் நடைபெற்ற குடியரசு கட்சியின் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஈரான் தலைவர்கள் பலர் என்னிடம், உங்களை அடுத்த ஆட்சியாளராக்க விரும்புகிறோம் என்று கூறினர். அதற்கு நான் ‘இல்லை, நன்றி’ என்று மறுத்துவிட்டேன்,” என தெரிவித்தார்.

இதற்கிடையில், கடந்த பிப். 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாகவும் செய்தி கூறுகிறது. மேலும் கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் இந்தக் கூற்றை சமூக வலைதளங்களில் பலரும் கேலி செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு போப் பிரான்சிஸ் மறைந்தபோது, அடுத்த போப் ஆக விரும்புகிறேன் என்று அவர் கூறியதும், போப் உடை அணிந்ததாக செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்ததும், பின்னர் போர்களை நிறுத்தியதாகக் கூறி நோபல் அமைதி பரிசு வேண்டும் என தெரிவித்ததும் மீண்டும் நினைவுபடுத்தப்படுகிறது.