இந்திய நிதித்துறை ஒழுங்குமுறை அமைப்புகளான ஆர்.பி.ஐ., செபி மற்றும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ. இணைந்து, 2025 அக்டோபர் முதல் டிசம்பர் வரை நாடெங்கிலும் “உங்கள் பணம், உங்கள் உரிமை” என்ற சிறப்பு முகாம்களை நடத்தின.

இந்த முகாம்கள் மூலம் சுமார் 22.95 லட்சம் உரிமை கோரல்கள் தீர்க்கப்பட்டு, ரூ.5,777 கோடி உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இன்னும் பெரும் தொகை கேட்பாரற்ற நிலையில் உள்ளது. வங்கிகளில் ரூ.60,518 கோடி, காப்பீட்டு துறையில் ரூ.8,974 கோடி, மியூச்சுவல் பண்டுகளில் ரூ.3,749 கோடி என மொத்தம் ரூ.73,241 கோடிக்கு மேல் உரிமை கோரப்படாமல் தேங்கி கிடக்கிறது.

இந்த தொகை உரியவர்களிடம் விரைவாக சேர்வதற்காக புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உரிமை கோரப்படாத டெபாசிட்களை மீட்டு வழங்கும் வங்கிகளுக்கு 5% முதல் 7.5% வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்; மேலும் அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடத்தி உரிமையாளர்களின் பட்டியலை வெளியிடவும் வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசி வழங்கும் போதே நாமினி விவரங்களை கட்டாயமாக சேகரிக்கவும், பாலிசிதாரர்களை தேடி சென்று நிலுவை தொகையை ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மியூச்சுவல் பண்டுகளில் ரூ.5 லட்சம் வரை உள்ள கிளைம்களுக்கு ஆவணங்கள் குறைக்கப்பட்டதுடன், ஆன்லைனில் விரைவாக பணம் பெற “இமேஜ்-பேஸ்டு” முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.