புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையை வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதனால் ‘இண்டி’ கூட்டணியில் குழப்பம் நீடித்து, வெற்றி வாய்ப்பே கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ்–தி.மு.க. இடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டதால், வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ‘சீட்’ ஒதுக்கப்படவில்லை என வி.சி.க. கூறுகிறது. காங்கிரஸ் 16, தி.மு.க. 14 என உடன்பாடு எட்டியதாக கூறப்பட்ட போதிலும், காங்கிரஸ் 22 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உழவர்கரை தொகுதியை ஒதுக்கினால் கூட்டணியில் தொடர்வோம் என திருமாவளவன் முன்பே அறிவித்திருந்தார். தி.மு.க. அந்த தொகுதியை ஒதுக்க சம்மதம் தெரிவித்தாலும், காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அங்கு காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை. இதனால் வி.சி.க.க்கு தொகுதி உண்டா, இல்லையா என்ற தெளிவில்லாத நிலை ஏற்பட்டதாக அவர் கூறினார்.
இதையடுத்து, புதுச்சேரியில் மூன்று தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்தார். ஊசுடு தொகுதியில் அரியபுத்ரி, நெட்டப்பாக்கம் தொகுதியில் அமுதவன், உழவர்கரை தொகுதியில் புஷ்பலதா ஆகியோர் வி.சி.க. சார்பில் போட்டியிடுவார்கள் என அவர் தெரிவித்தார்.
மேலும், காங்கிரஸின் இந்த அணுகுமுறை சரியல்ல என்றும், இது ஒட்டு மொத்தமாக ‘இண்டி’ கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.




