புதுடில்லி: மேற்காசியப் பகுதியில் நிலவும் போர் பதற்றத்தால் பல துறைகள் நெருக்கடியை சந்திக்கும் நிலையில், இந்திய சுற்றுலா துறை மட்டும் கணிசமான வளர்ச்சியை காண்கிறது. வெளிநாட்டு கோடை விடுமுறை திட்டங்களை மாற்றி, உள்நாட்டு பயணங்களை பலர் முன்னிலைப்படுத்தத் தொடங்கியதே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.

கடந்த பிப். 28-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல்–ஈரான் போர் காரணமாக மேற்காசிய வான்வழி வழித்தடங்களில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்குச் செல்ல இந்த வழித்தடங்கள் முக்கியமானவை என்பதால், இந்திய பயணிகளின் வெளிநாட்டு திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா பதிவு தளமான ‘வாண்டர்ஆன்’ தகவலின்படி, சுமார் 65% பயணிகள் தற்போது உள்நாட்டிலேயே சிறந்த இடங்களைத் தேடி வருகிறார்கள்; குறுகிய நாள் பயணங்களுக்கு முன்னுரிமை அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த மாற்றத்தை தெளிவாகக் காண முடிகிறது என அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ. கோவிந்த் கவுர் கூறியுள்ளார்.

அதே தளத்தின் கணக்கீட்டின்படி, லடாக், ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா, குலு, மணாலி, உத்தரகண்ட் உள்ளிட்ட குளிர்ப் பகுதிகளுக்கும், வடகிழக்கு மாநிலங்களின் மலைவாசஸ்தலங்களுக்கும் (ஷில்லாங் உள்ளிட்டவை) செல்ல 30% பேர் ஆர்வம் காட்டுகின்றனர். ஆன்மிக சுற்றுலாவும் உயர்ந்து, உத்தரகண்டில் உள்ள ரிஷிகேஷ் செல்ல 23% பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மலைவாசஸ்தலங்கள் மட்டுமின்றி நகர சுற்றுலாவிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது. ராஜஸ்தானின் உதய்பூருக்கு இந்த ஆண்டு 69% பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், அதற்கு அடுத்ததாக ஜோத்பூருக்கு 47% பேர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர், அகர்தலா மீதும் கவனம் திரும்பியுள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டு பயண ஆர்வம் முழுமையாக குறையாமல், வியட்நாம், நேபாளம், இலங்கை, இந்தோனேஷியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற அருகிலுள்ள நாடுகளுக்கு மாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.