வயது வந்த பெண்ணுடன் பரஸ்பர சம்மதத்துடன் ‘லிவ்-இன்’ உறவில் (திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் உறவு) திருமணமான ஆண் ஒருவர் வாழ்வது மட்டும் காரணமாக அவர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உத்தரப் பிரதேசம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த நேத்ரபால்–அனாமிகா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், இருவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், ‘லிவ்-இன்’ உறவில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர். அனாமிகாவின் தாய் அளித்த போலீஸ் புகாரை ரத்து செய்யவும், தங்களுக்கு மிரட்டல் இருப்பதாக கூறி பாதுகாப்பு வழங்கவும் அவர்கள் கோரினர்.
நீதிபதிகள் ஜே.ஜே. முனீர் மற்றும் தருண் சக்சேனா அமர்வில் நடந்த விசாரணையில், பெண்ணின் தாய் தரப்பு வழக்கறிஞர், நேத்ரபால் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் இது சட்டப்படி குற்றம் என வாதிட்டார். மனுதாரர்கள் தரப்பு, இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் வாழ்வதால் இது குற்றமாகாது என தெரிவித்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஒழுக்கநெறி மற்றும் சட்டம் இரண்டும் ஒன்றல்ல எனக் குறிப்பிட்டு, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆண் எந்தக் குற்றமும் செய்ததாக தெரியவில்லை என்றது. மேலும், மனுதாரர்களை போலீசார் கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டது.
தங்களின் உயிருக்கு பாதுகாப்பில்லை என்ற மனுதாரர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது; அவர்கள் வசிக்கும் இல்லத்திற்குள் நுழையக் கூடாது; நேரடியாகவோ, மின்னணு தொடர்பு வழியாகவோ, மூன்றாம் நபர் மூலமாகவோ தொடர்பு கொள்ள முயற்சிக்கக் கூடாது எனத் தடையிட்டது. மனுதாரர்களின் பாதுகாப்புக்கு ஷாஜஹான்பூர் போலீசாரே பொறுப்பு என்றும் கூறி, வழக்கை ஏப்ரல் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.




