சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.
அ.தி.மு.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் பா.ஜ., பா.ம.க., அமமுக, த.மா.கா., புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. ஒதுக்கீட்டின்படி பா.ஜ.க்கு 27, பா.ம.கா.க்கு 18, அமமுகக்கு 11, த.மா.கா.க்கு 5, இந்திய ஜனநாயக கட்சிக்கு 2, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் புரட்சி பாரதம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 169 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.
அமமுக வேட்பாளர்கள் பட்டியலில் பெரியகுளம் (கதிர்காமு), மன்னார்குடி (காமராஜ்), திருவையாறு (கார்த்திகேயன்), காரைக்குடி (தேர்போகி பாண்டி), திருப்பத்தூர் (ஞானசேகரன்), நாங்குநேரி (இசக்கிமுத்து), ஒட்டப்பிடாரம் (சுந்தர்ராஜன்), திருச்சி மேற்கு (செந்தில்நாதன்), சைதாப்பேட்டை (செந்தமிழன்), பூந்தமல்லி (ஏழுமலை), மடத்துக்குளம் (சி. சண்முகவேல்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் 120 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையையும் தினகரன் வெளியிட்டார். அதில் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவது, விவசாயக் கடன் தள்ளுபடி, ஆசிரியர்கள் விரும்பும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது, ஆண்களுக்கு சுய உதவி நிதி வழங்குவது, வட தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. ஜெயலலிதா மற்றும் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்துவது, கச்சத்தீவை மீட்க வலியுறுத்துவது, கனிம வளக் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுப்பது ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிரசாரம் தொடர்பாக, தானும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் இணைந்து தஞ்சாவூர் மற்றும் ஆண்டிப்பட்டியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தினகரன் தெரிவித்தார்.




