கொல்கட்டா: நீதித்துறை ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்பட்ட துணை வாக்காளர் பட்டியலில், கொல்கட்டா உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியும் மேற்கு வங்க வக்பு வாரியத் தலைவருமான ஷாஹிதுல்லா முன்ஷியின் பெயர் நீக்கப்பட்டதாக கூறப்பட்டதால் மேற்கு வங்கத்தில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

மேற்கு வங்கத்தின் 294 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப். 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பரில் வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின.

பிப். 28 அன்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் 63.66 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆளும் திரிணமுல் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் 60.66 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் தகுதி நீதித்துறை அதிகாரிகளின் சரிபார்ப்பின் மூலம் தீர்மானிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், ஆய்வில் உள்ளவர்களுக்கான முதல் துணைப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டபோது, அதில் முன்ஷியின் பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர் கூறுகையில், விசாரணைக்கு நேரில் ஆஜராகி பாஸ்போர்ட்டை சமர்ப்பித்ததாகவும், ஆதார் மற்றும் பான் அட்டைகளையும் வழங்கத் தயாராக இருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் எந்த ஒப்புகைச் சீட்டும் வழங்கப்படவில்லை என்றும் கூறினார்.

தன் பெயர் மட்டும் நீக்கப்பட்டுள்ள நிலையில், மனைவி மற்றும் மகனின் பெயர்கள் இன்னும் பரிசீலனையில் இருப்பதாக அவர் தெரிவித்தார். இது அவமானகரமானது என்றும், துன்புறுத்தலுக்கு ஒப்பானது என்றும் கூறிய அவர், எந்த அடிப்படையில் பெயர் நீக்கப்பட்டது என்பது தெரியவில்லை எனவும், இதை எதிர்த்து மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுக முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.