புதுடில்லி: டில்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை இன்று வரை காலி செய்யுமாறு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதிலிருந்து அக்கட்சிக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது.
எண் 24, அக்பர் சாலை முகவரியில் 1978 முதல் காங்கிரஸ் தலைமையகம் செயல்பட்டு வந்தது. நிர்வாகம் மற்றும் இடவசதி காரணமாக 2025 ஜனவரியில் ஐ.டி.ஓ பகுதியில் புதிய அலுவலகத்திற்கு தலைமையகம் மாற்றப்பட்டு, அதற்கு “இந்திரா பவன்” என பெயரிடப்பட்டது; தற்போது கட்சியின் பணிகள் அங்கே நடைபெறுகின்றன.
இருப்பினும், கட்சியின் அடையாளம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் கருதி அக்பர் சாலை முகவரியை காங்கிரஸ் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது; அதற்கான வாடகையும் செலுத்தி வருகிறது. இதேபோல் எண் 5, ரைசினா சாலையில் இயங்கும் காங்கிரஸ் இளைஞரணி அலுவலகத்தையும் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
காலக்கெடு இன்று முடிவடைய இருந்த நிலையில், அக்பர் சாலை அலுவலகத்தை மேலும் ஆறு மாதங்கள் வைத்திருக்க முடியும் வகையில் இடைக்கால நிவாரணம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசுடன் நடந்த திரைமறைவு பேச்சுகளில் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், அஜய் மாகன் ஆகியோர் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தகுதியுள்ள முன்னாள் முதல்வர்களுக்கு அரசு இல்லங்கள் ஒதுக்கப்பட்ட பிறகு, இடைக்கால ஏற்பாடாக அந்த இல்லங்களில் ஒன்றிலிருந்து கட்சி அலுவலகத்தை இயக்கும் வாய்ப்பையும் காங்கிரஸ் பரிசீலித்து வருகிறது. அதே நேரத்தில், அமைச்சக நோட்டீசுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவும் கட்சி முடிவு செய்துள்ளதாகவும், இந்த பணிகளில் ராஜ்யசபா எம்.பி மற்றும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.




