சென்னை: சட்டசபை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். இதில் இந்த முறை அமைச்சர்கள் காந்தி, மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கு சீட் வழங்கப்படவில்லை.

மொத்தம் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பல முக்கிய அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டாலும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் பட்டியலில் இடம் பெறவில்லை.

அமைச்சர் காந்தி சமீபத்தில் நிகழ்ச்சிகளில் பேசிய கருத்துகள் தொடர்பாக விமர்சனங்களை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை தொகுதியில் அவரது மகன் வினோத் போட்டியிடுகிறார்.

மனோ தங்கராஜ் கடந்த சில வாரங்களில் பல சர்ச்சைகளில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின. டிவி நிகழ்ச்சியில் பேசிய கருத்துகள் மற்றும் விமான நிலைய ஓய்வறை தொடர்பான வீடியோ உள்ளிட்டவை கவனம் பெற்றன. அவர் இரண்டு முறை வென்ற பத்மநாபபுரம் தொகுதி இந்த முறை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கும் மீண்டும் சீட் வழங்கப்படவில்லை; அவருக்கு பதிலாக இந்திராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் முன்னாள் அமைச்சர் பொன்முடி இந்த முறை போட்டியிடவில்லை; திருக்கோவிலூர் தொகுதியில் கவுதம சிகாமணி களமிறங்குகிறார்.