முரசொலி அறக்கட்டளையுடன் தொடர்புடையதாக கூறப்படும் சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவில், சி.பி.ஐ. மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் (என்.சி.எஸ்.டி.) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் கே. வெங்கடாசலபதி தாக்கல் செய்த இந்த மனுவில், மார்ச் 12 மற்றும் 17 தேதிகளில் அளித்த புகார்களை அடிப்படையாகக் கொண்டு சி.பி.ஐ. விசாரணை உத்தரவு கோரப்பட்டுள்ளது. ‘பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் முரசொலி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது’ என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தாமசேஷாத்ரி நாயுடு, கடந்தாண்டு மார்ச் 31 நிலவரப்படி அறக்கட்டளைக்கு ரூ.143.40 கோடி நிதி இருப்பதாகவும், நில உரிமை தொடர்பாக முரண்பாடுகள் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், பரிந்துரைக்கும் அமைப்பாக உள்ள என்.சி.எஸ்.டி.-க்கு உண்மையை கண்டறிய உதவும் விசாரணை பிரிவு இல்லை என்றும் வாதிட்டார்.

முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், மனுதாரர் தன்னை வழக்கறிஞர் என கூறினாலும் அவர் பா.ஜ.க. திருநெல்வேலி மாவட்டச் செயலர் என்றும், உண்மைகளை மறைத்து அரசியல் உள்நோக்குடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். இதற்கு நீதிபதிகள், முரசொலி அலுவலகம் விவகாரத்தில் நீதிமன்றம் எதுவும் கூறவில்லை என்றும், இந்த விவகாரத்தில் என்.சி.எஸ்.டி. விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சி.பி.ஐ., என்.சி.எஸ்.டி. மற்றும் முரசொலி அறக்கட்டளை உள்ளிட்ட தரப்புகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.