விசாகப்பட்டினத்திலிருந்து டில்லிக்கு சென்ற இண்டிகோ விமானம், இலக்கை நெருங்கிய போது இன்ஜின் தொடர்பான தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து டில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த 6E 579 விமானத்தில் 161 பயணிகள் பயணம் செய்தனர். கோளாறு குறித்து விமானி உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்; இதையடுத்து விமான நிலையம் அவசர நடவடிக்கைகளுக்காக உஷார்படுத்தப்பட்டது.

தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் தயாராக நிறுத்தப்பட்ட நிலையில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. பின்னர் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்; யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இண்டிகோ வெளியிட்ட அறிக்கையில், தரையிறங்குவதற்கு முன்பே தொழில்நுட்ப பிரச்னை கண்டறியப்பட்டதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதி பெற்று உடனடியாக தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவித்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விமானம் ஆய்வில் இருப்பதாகவும் கூறியது.

மேலும், துருக்கியின் கோரியன்டன் (Corendon) விமான நிறுவனத்திடமிருந்து குறுகிய காலத்திற்கு குத்தகைக்கு எடுத்த 5 விமானங்களில் ஒன்றில்தான் இந்த இன்ஜின் கோளாறு ஏற்பட்டதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.