ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை தயாரிக்காது; தற்போதைய போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உதவ முடியும் என்று இந்தியாவிலுள்ள ஈரான் ஆட்சியாளரின் பிரதிநிதி அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி, ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
போர் முடிவுக்கு வருமா என்ற கேள்விக்கு, போரைத் தொடங்கிய நாடுகளே அதை நிறுத்தத் தயாராக இல்லை என அவர் குற்றம்சாட்டினார். ஆயுத விற்பனை மற்றும் எண்ணெய் விலை உயர்வின் மூலம் அவர்கள் லாபம் பார்க்க விரும்புகிறார்கள்; ஏழை மக்கள் மற்றும் நாடுகள் குறித்து கவலைப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.
அணுசக்திக் கொள்கை குறித்து, அணு ஆயுதங்கள் தடைசெய்யப்பட்டவை என ஈரான் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லை; அவற்றை தயாரிக்கவும் வைத்திருக்கவும் விருப்பமில்லை என்றும் இலாஹி தெரிவித்தார்.
இந்தியா-ஈரான் தொடர்புகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கனை தொலைபேசியில் தொடர்புகொண்டு நல்ல கலந்துரையாடல் நடத்தியதாகவும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஈரான் தலைமைகள் பலமுறை பேசினதாகவும் கூறினார். பிராந்திய அமைதியை இரு தரப்பும் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த உரையாடல் தொடரும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
மேலும், தற்போதைய போரில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்கிறது என்ற தகவலை அவர் மறுத்து, அது ஊடக பரபரப்புக்காக உருவாக்கப்பட்ட செய்தி என்றார். ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இடையூறுகள் நிலவும் நிலையில், அங்கு பாதுகாப்பு நிலையாக இல்லை என்றும், போரை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டவர்களிடம் நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.




