புதுடில்லி: சிறிய மீறல்களை குற்றமாகக் கருதாமல் மாற்றி, சிறைத் தண்டனைகளுக்கு பதிலாக அபராதம் போன்ற தண்டனைகளை முன்னிறுத்தும் நோக்கில் ‘ஜன் விஷ்வாஸ் (சட்டப்பிரிவுகள் திருத்த) மசோதா, 2026’ நேற்று லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்கு முன், பல்வேறு சட்டங்களின் கீழ் வரும் சிறு குற்றங்களை குற்றமற்றவையாக்கும் நோக்கில் மத்திய அரசு 2023ல் ‘ஜன் விஷ்வாஸ்’ சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. அதன் கீழ், 19 அமைச்சகங்கள் அல்லது துறைகள் நிர்வகிக்கும் 42 மத்திய சட்டங்களில் உள்ள 183 பிரிவுகள் குற்றமற்றதாக மாற்றப்பட்டன.
பின்னர் 2025ல் திருத்த மசோதா லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டு, பார்லிமென்ட் தேர்வுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பல அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்திய தேர்வுக் குழு, மார்ச் 13ல் தனது அறிக்கையை பார்லிமென்டில் சமர்ப்பித்தது. இதையடுத்து, மேலும் மாற்றங்கள் செய்யும் நோக்கில் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பீயூஷ் கோயல், மார்ச் 18ல் 2025 மசோதாவை திரும்பப் பெற்றார்.
இந்நிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா, 2026 மசோதாவை லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்தார். இதில் 57 சட்டப்பிரிவுகளில் சிறைத் தண்டனையை நீக்கவும், 158 சட்டப்பிரிவுகளில் அபராதத்தை நீக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் 17 பிரிவுகளில் சிறைத் தண்டனை காலத்தை குறைக்கவும், 113 பிரிவுகளில் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் ஆகியவற்றை வெறும் அபராதமாக மாற்றவும் முன்மொழிவு உள்ளது.
பெரிய அளவிலான மீறல்கள் அல்லது தீவிரமான குற்றங்கள் எந்த வகையிலும் நீர்த்துப்போகச் செய்யப்படவில்லை என்றும், தேசிய பாதுகாப்பு, தொழிலாளர் நீதிமன்றங்கள், ஆயுதப் படைகள் மற்றும் சர்வதேச கடமைகள் தொடர்பான முக்கிய துறைகள் இந்தச் சீர்திருத்தத்தின் வரம்பில் சேர்க்கப்படாமல் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு தெரிவித்தது.




