திருவனந்தபுரம்: கேரளத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு சாப்ட்வேர் கொள்முதல் செய்வதில் இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) அரசு ரூ.700 கோடி அளவிலான நஷ்டம் ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டினார்.

மாநிலத்தின் 4,415 தொடக்க கூட்டுறவு வங்கிகளுக்கு கணினி சாப்ட்வேர் வழங்க ரூ.206 கோடிக்கு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்துடன் முதலில் ஒப்பந்தம் கையெழுத்தானதாக அவர் தெரிவித்தார்.

பின்னர் TCS பங்கேற்க முடியாத வகையில் புதிய நிபந்தனைகள் சேர்க்கப்பட்டு டெண்டர் ரத்து செய்யப்பட்டதாகவும், மாற்றப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் கண்ணூரை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் மட்டுமே தகுதி பெற்றதாகவும் அவர் கூறினார். அந்த நிறுவனங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டில் உள்ளவை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

அவற்றில் ஒன்றான தினேஷ் பீடி கூட்டுறவு சங்கத்துக்கு சாப்ட்வேர் பணியில் முன் அனுபவம் இல்லாத நிலையில் ரூ.58 கோடிக்கு டெண்டர் கோரியதாகவும், அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க அரசு வாய்ப்புள்ளதாகவும் சென்னிதலா கூறினார். சுமார் 4,400 கூட்டுறவு சங்கங்களுக்கு சாப்ட்வேர் வழங்க மொத்த செலவு ரூ.915 கோடி ஆகும் என்றும், புதிய நடைமுறையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டால் ரூ.700 கோடி நஷ்டம் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், டெண்டர் வழங்க தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை காத்திருக்கிறது பினராயி அரசு எனவும் அவர் குற்றம்சாட்டினார்.