ஈரான் அனுமதியுடன் இந்தியா நோக்கி வரும் மேலும் இரண்டு எல்பிஜி கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான்–இஸ்ரேல் இடையிலான போர் நீடிப்பதால், ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு, ஈரான் தவிர பிற வாய்ப்புள்ள நாடுகளிலிருந்தும் கூடுதலாக கச்சா எண்ணெய் பெற நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியா நோக்கி பயணிக்கும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க இந்திய கடற்படையின் கப்பல்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் மேலும் சில கப்பல்கள் வந்து சேரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ஜக் வசந்த், நந்தா தேவி, சிவாலிக் ஆகிய எல்பிஜி கப்பல்கள் இந்தியா வந்தடைந்துள்ள நிலையில், தற்போது BW ELM மற்றும் BW TYR கப்பல்கள் இந்தியாவை நோக்கி வருகின்றன. கடல் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் உள்ளதால், பல கப்பல்கள் இன்னும் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன.




