புதுடில்லி: மேற்காசிய போர் சூழல் காரணமாக உருவாகும் நிச்சயமற்ற நிலைமையை முன்னிட்டு, பதுக்கல்காரர்கள் மற்றும் அதிக லாப நோக்கில் செயல்படுபவர்கள் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். வினியோக சங்கிலி தடையின்றி இயங்குவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களைத் தவிர மற்ற முதல்வர்கள் இதில் பங்கேற்றனர். எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கட்டான நேரத்தில் அனைவரும் “டீம் இந்தியா” என்ற ஒரே அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் நாடு வெற்றிகரமாக மீண்டு வர முடியும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். பொருளாதார மேலாண்மை, வர்த்தக ஸ்திரத்தன்மை, எரிசக்தி பாதுகாப்பு, குடிமக்களின் நலன் பாதுகாப்பு, தொழில்துறை மற்றும் வினியோக சங்கிலி வலுப்படுத்தல் ஆகியவற்றுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.
விவசாயத் துறையில் முன்கூட்டியே திட்டமிடுவதுடன், உரம் சேமிப்பு மற்றும் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விரைவாக செயல்பட அனைத்து நிலைகளிலும் வலுவான ஒருங்கிணைப்பு தேவை என்றும், கப்பல் போக்குவரத்து மற்றும் கடலோர பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை சமாளிக்க எல்லையோரம் மற்றும் கடலோர மாநிலங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுவதைக் குறித்து எச்சரித்த பிரதமர், துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர்கள், மத்திய அரசு சூழ்நிலையை திறம்பட கையாள்வதாக பாராட்டு தெரிவித்ததுடன், பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரி குறைப்பை வரவேற்றனர்; மாநிலங்களுக்கு வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டர் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.




