காத்மாண்டு: கடந்த ஆண்டு இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்களை அடக்கிய நடவடிக்கைகள் தொடர்பான வழக்கில், நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 8 அன்று இளம் தலைமுறையினர் பார்லிமென்டை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி பின்னர் வன்முறையாக மாறியது.
போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கூட்டத்தை கலைக்க பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்கள் நீண்ட கலவரத்தில் 76 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. இதன் பின்னர் ஒலி பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, தனது அரசையும் கலைத்தார்.
போராட்டங்களின்போது துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு காரணம் எனக் கூறி, ஒலி உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், நீதிபதி கவுரி பகதூர் கார்கி தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் குழுவின் விசாரணைக்காக எப்.ஐ.ஆர். விவரங்கள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மார்ச் 28 அன்று முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் என்பவரும் கைது செய்யப்பட்டார். பக்தபூரில் உள்ள ஒலியின் இல்லத்திலிருந்து அவரை போலீசார் அழைத்துச் செல்வதும், மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதும் தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. 47வது பிரதமராக, ராப் பாடகரும் காத்மாண்டு முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா நேற்று பதவியேற்றதையடுத்து, அடுத்த நாளே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




