காத்மாண்டு: பதவியேற்றதையடுத்து வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மாணவர் போராட்டத்தால் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் பின்னணியில், கே.பி. சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. புதிய அரசை அமைப்பதற்கான பொதுத் தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்தலில், ராப் பாடகரும் காத்மாண்டு முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா தலைமையிலான ராஷ்ட்ரீய சுதந்திரக் கட்சி (ஆர்.எஸ்.பி.) வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் நேற்று பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், மோடியின் வாழ்த்து செய்திக்கு நன்றி தெரிவித்த ஷா, மக்களின் வளர்ச்சிக்காகவும் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் மோடியுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார்.