புதுடில்லி: கொரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்டதைப் போல நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கும் எந்தத் திட்டத்தையும் மத்திய அரசு தற்போது பரிசீலிக்கவில்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

மேற்காசியப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்துவதாகவும், அதற்கு பதிலடியாக அந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிலைகளின் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், உலகளவில் சுமார் 20% எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் தடை விதித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு உலகளவில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்தது. இதன் பின்னணியில் இந்தியாவில் நாடு முழுவதும் ‘லாக்டவுன்’ அறிவிக்கப்படும் என வதந்திகள் பரவின.

அந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், அத்தகைய திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மக்கள் அமைதியாகவும் பொறுப்புணர்வுடனும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். எரிசக்தி மற்றும் எரிபொருள் விநியோகம் தடையின்றி தொடர மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், எழக்கூடிய சவால்களை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ‘லாக்டவுன்’ அமல்படுத்த வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.