போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) உடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். மீண்டும் கட்சிக்குள் நுழைய முயன்றும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், பிப்ரவரி 27 அன்று தனது மகன் ரவீந்தரநாத் உடன் திமுகவில் இணைந்தார்.

திமுக தலைமை வாய்ப்பு அளித்தால் போடிநாயக்கனூரில் போட்டியிடுவேன் என ஓபிஎஸ் கூறி வந்தார். மேலும் திமுகவை ஆதரித்து, இபிஎஸை கடுமையாக விமர்சித்து கட்சி மேடைகளிலும் பேட்டிகளிலும் பேசினார்.

இதனைத் தொடர்ந்து திமுக அவருக்கு போடிநாயக்கனூர் தொகுதியை ஒதுக்கியதாக கூறப்படுகிறது. அதே தொகுதியில் அதிமுக வேட்பாளராக, கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.டி.நாராயணசாமியை இபிஎஸ் அறிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் கட்சி மாறி வந்த வைத்திலிங்கம் ஒரத்தநாட்டிலும், மனோஜ் பாண்டியன் ஆலங்குளத்திலும் போட்டியிட திமுக சீட் வழங்கியதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.