நிதி மசோதா மீதான விவாதத்தின் போது, தி.மு.க. தேர்தல் கோஷமான ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழகம் வெல்லட்டும்’ என்ற வாசகத்தை முன்வைத்து ராஜ்யசபாவில் வியாழக்கிழமை தி.மு.க.-அ.தி.மு.க. இடையே வாதம் எழுந்தது.

விவாதத்தில் பேசிய தி.மு.க. எம்.பி. வில்சன், தமிழகத்திற்கு மத்திய அரசு போதுமான நிதி வழங்கவில்லை என குற்றஞ்சாட்டி, அதனுடன் அந்த கோஷத்தையும் குறிப்பிட்டார்.

அப்போது சபைத் தலைவர் இருக்கையில் அமர்ந்து சபையை நடத்திக் கொண்டிருந்த அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை உடனடியாக பதிலளிக்கவில்லை. பின்னர் அதே விவாதத்தில் பேச வாய்ப்பு கிடைத்தபோது, வில்சனின் குற்றச்சாட்டை மறுத்த அவர், தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தை விட தற்போது தமிழகத்திற்கு நான்கு மடங்கு அதிக நிதி வந்துள்ளதாக கூறினார்.

மேலும், மத்திய திட்டங்களை மாநில அரசு சரிவர செயல்படுத்த மறுப்பதாகவும், மத்திய நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், மாநிலம் பெரும் கடன் சுமையில் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் தி.மு.க. அரசை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறிய தம்பிதுரை, தமிழக வெற்றிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி மட்டுமே வழி எனவும் தெரிவித்தார்.