தமிழகத்தில் தொழில் வளர்ச்சி உண்மையா அல்லது மிகைப்படுத்தப்பட்டதா என்ற கேள்வியை மையமாக வைத்து, பா.ஜ.க. மற்றும் ஆளும் தி.மு.க. இடையே புதிய அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பும் முதலீடு, வேலைவாய்ப்பு, தொழில் சூழல் குறித்து மாறுபட்ட தகவல்களை முன்வைக்கின்றன.

தமிழக பா.ஜ.க. தொழில்துறை வல்லுநர் பிரிவு தலைவர் ஆடிட்டர் எஸ். சுந்தர்ராமன், கடன் வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை கல்வி, ஊரக வளர்ச்சியில் காட்டாதது நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துகிறது என குற்றம்சாட்டினார். தொழில் துறை அமைச்சர் ராஜா அறிவித்ததாக கூறப்பட்ட தென் கொரிய காலணி நிறுவனத்தின் ரூ.1,720 கோடி முதலீடு, இறுதியில் ஆந்திராவின் குப்பத்துக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ரூ.15,000 கோடி முதலீடு செய்யப் போவதாக கூறப்பட்ட பாக்ஸ்கான் திட்டத்தை அந்த நிறுவனமே மறுத்ததாகவும், கூகுள் தரவு மைய முதலீடு விசாகப்பட்டினத்திற்கு சென்றபோது அமைச்சர் அளித்த விளக்கம் பொருத்தமற்றதாகவும் விமர்சித்தார். 2022 முதல் மின்சார நிலை கட்டணம் 450% உயர்ந்ததாக கூறி, சிறு-குறு-நடுத்தர தொழில்கள் பாதிக்கப்படுகின்றன என்றும், “இந்தியாவின் டெட்ராய்டு” என்ற தமிழகத்தின் பெயர் ‘வசூல் அரசியல்’ காரணமாக சிதைகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலன் (மாநில திட்டக்குழு உறுப்பினர்), தி.மு.க. ஆட்சியில் ரூ.12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், 35 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் கூறினார். 11.19% பொருளாதார வளர்ச்சி விகிதம் எட்டியதாகவும், StartupTN மூலம் நிதியுதவி உள்ளிட்ட ஆதரவுகள் வழங்கப்பட்டதாகவும், சென்னை-கோவையில் ஸ்டார்ட் அப் மாநாடுகள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2021ல் 2,300 ஆக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தற்போது 12,500 ஆக உயர்ந்ததாகவும், தொழில் நிறுவனங்கள் அதிகரிப்பதால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்ந்து ஜி.எஸ்.டி. வசூலில் பிரதிபலிக்கிறது என்றும் எழிலன் கூறினார். தோல் அல்லாத காலணி போன்ற உற்பத்தித் துறைகளில் தமிழகம் முன்னணியில் இருப்பதாகவும், ஏற்றுமதி தரவரிசை 14வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு உயர்ந்ததாகவும், இவை மத்திய அரசு மற்றும் நிடி ஆயோக் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.