வாஷிங்டன்: அமெரிக்க டாலர் நோட்டுகளில் இதுவரை நிதி அமைச்சரின் கையெழுத்தே இடம்பெற்று வந்த நிலையில், 165 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக அதிபரின் கையெழுத்தும் சேர்க்கப்பட உள்ளது.

இந்த மாற்றம், அமெரிக்காவின் 250வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகிறது. இதை நினைவுகூரும் வகையில் சிறப்பு நாணயங்கள் மற்றும் தபால் தலைகளை வெளியிட அமெரிக்க கலை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த வெளியீடுகளில், அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவம் பொறித்த 24 காரட் தங்க நாணயமும் இடம்பெறுகிறது. அதில் “1776–2026” ஆண்டுகளும் “சுதந்திரம்” என்ற சொல்லும் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாலர் நோட்டுகளில் டிரம்பின் கையெழுத்து இடம்பெறும் என்று அமெரிக்க நிதித்துறை பொருளாளர் பிராண்டன் பீச் அறிவித்தார். சமூக வலைதளப் பதிவில், இது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு என்றும், டிரம்ப் கையெழுத்துடன் நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட்டின் கையெழுத்தும் சேரும் என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் 1861ல் டாலர் நோட்டு அறிமுகமானதிலிருந்து நிதி அமைச்சரின் கையெழுத்தே அதில் இடம்பெற்று வந்தது. இப்போது 165 ஆண்டுகளில் முதன்முறையாக அதிபரின் கையெழுத்து டாலர் நோட்டில் இடம் பெற உள்ளது.