நாமக்கல் தொகுதிக்கான அ.தி.மு.க. வேட்பாளராக கட்சியின் மாநில வர்த்தக அணி செயலர் ஸ்ரீதேவி மோகன் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சிக்குள் அதிருப்தி வெளிப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், மாவட்ட செயலரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலையீட்டால் தமக்கு ‘சீட்’ மறுக்கப்பட்டதாக கூறினார். இதையடுத்து, பாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் பள்ளிப்பாளையம் அருகே கோவிந்தம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டிற்கு சென்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பாஸ்கர், தங்கமணி சர்வாதிகாரமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி, அ.தி.மு.க.வில் நாமக்கல் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், முன்னாள் அமைச்சரை குறிவைத்து கடுமையான கருத்துகளையும் தெரிவித்தார்.

ஸ்ரீதேவி மோகன் வேட்புமனுவுக்கு எதிராக நான்கு ஒன்றிய செயலர்கள் உள்ளிட்ட சிலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில், பாஸ்கரின் கட்சி பதவி பறிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்த தங்கமணி, தாம் வீட்டில் இல்லாத நேரத்தில் சாலையை மறித்து மிரட்டியதாகவும், முன்னாள் எம்.எல்.ஏ. என்ற நாகரிகம் இல்லாமல் ‘ரவுடி’ போல் நடந்துகொண்டதாகவும் குற்றம்சாட்டினார். இத்தகைய நடவடிக்கைகளால் தாம் அஞ்சமாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.