தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் ஒரே குடும்பத்துக்குள் நேருக்கு நேர் போட்டி உருவாகியுள்ளது. தி.மு.க. சார்பில் மகாராஜனும், அ.தி.மு.க. சார்பில் அவரது தம்பி லோகிராஜனும் மூன்றாவது முறையாக எதிரெதிராக போட்டியிடுகின்றனர்.
ஆண்டிப்பட்டி மாவட்டத்தின் முக்கியமான தொகுதியாகக் கருதப்படுகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் இத்தொகுதியில் போட்டியிட்டு வென்றதால், மாநிலம் தாண்டியும் கவனம் பெற்றதாக குறிப்பிடப்படுகிறது.
2019 லோக்சபா தேர்தலுடன் நடைபெற்ற ஆண்டிப்பட்டி சட்டசபை இடைத்தேர்தலில் மகாராஜன், லோகிராஜனை தோற்கடித்தார். 2021 சட்டசபை தேர்தலிலும் இதே அண்ணன்-தம்பி போட்டி நடந்த நிலையில், மகாராஜன் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இருமுறை வாய்ப்பை இழந்தாலும், தொகுதி மற்றும் கட்சி மேலிடத்தில் தனது செல்வாக்கை லோகிராஜன் நிலைநிறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அ.தி.மு.க. சார்பில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து இரண்டு வெற்றிகளுக்குப் பிறகு, மகாராஜனும் தி.மு.க. வேட்பாளராக மூன்றாவது முறையாக களமிறங்குகிறார்.




