அசாமில் ஏப். 9-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. முன்னாள் காங்கிரஸ் தலைவரான ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் அங்கு தற்போது பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இந்தத் தேர்தல் பணிகளை காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
கட்சியின் வாய்ப்புகளை உயர்த்தும் நோக்கில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரை அசாம் மாநில பார்வையாளராக நியமித்தனர். வேட்பாளர்கள் மற்றும் பிரசார செலவுகளுக்கு அவர் ஆதரவு அளிப்பார் என்ற எதிர்பார்ப்பும் இதற்குக் காரணமாக இருந்ததாக தகவல் தெரிவிக்கிறது.
குவஹாத்திக்கு சென்ற சிவகுமார், மாநில காங்கிரஸின் நிலைமையை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. முக்கிய தலைவர்கள் பலர் ஏற்கனவே பா.ஜ. பக்கம் சென்றுவிட்டதாகவும், இன்னும் சிலர் அங்கு தாவத் தயாராக உள்ளதாகவும் அவர் அறிந்ததாக தகவல்.
இந்த சூழலில், “அசாமில் காங்கிரஸ் வெற்றி பெறுவது கடினம்; கட்சி மிகவும் பலவீனமாக உள்ளது” என்று பிரியங்காவிடம் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பலன் இல்லாமல் பணத்தை செலவிட விரும்பவில்லை என்றும் அவர் கூறியதாகவும், தொடக்கத்தில் உற்சாகமாக இருந்த பிரியங்கா இந்த மதிப்பீட்டை கேட்டு நொந்து போனதாகவும் அந்தத் தகவல் குறிப்பிடுகிறது.




