சென்னை: முன்னாள் அமைச்சர் மற்றும் தி.மு.க. மூத்த தலைவர் அன்பழகனின் பேரன் வெற்றியழகனுக்கு இந்த முறை தேர்தல் டிக்கெட் மறுக்கப்பட்டதாக வெளியாகிய தகவல், கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. பொதுச்செயலராக இருந்த அன்பழகன், கல்வி, நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளில் அமைச்சராகவும் பணியாற்றியவர். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகவும் அவர் அறியப்பட்டார். உடல்நலக் குறைவுக்குப் பிறகு அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அன்பழகன் மறைவுக்குப் பின்னர், 2021 சட்டசபை தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் அவரது பேரன் வெற்றியழகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகரை சுமார் 37,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், ஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் கட்சி பணிகளில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் இந்த முறை அண்ணா நகர் எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்திக்கிற்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெற்றியழகனுக்கு டிக்கெட் வழங்காதது அன்பழகன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் கூறுகிறது.




