ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும் என்ற நீண்டகால அரசியல் ‘சென்டிமென்ட்’ பேசப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ. காதர்பாட்ஷா தொகுதியை தக்கவைக்க சிறுபான்மையினர் உள்ளிட்ட தன் ஆதரவான வாக்கு வங்கியை குறிவைத்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சமீப நாட்களில் சில்வர் அண்டா, தட்டு, டம்ளர், கரண்டி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கி ஆதரவை உறுதிப்படுத்த முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவரை எதிர்த்து போட்டியிட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டனே சரியான வேட்பாளர் என அக்கட்சியினர் மட்டுமின்றி பிற கட்சியினரும் கருதிய நிலையில், அ.தி.மு.க. உட்கட்சி பூசல் காரணமாக ராமநாதபுரம் தொகுதி கூட்டணி கட்சி பா.ஜ.க்கு ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முடிவால் மணிகண்டன், அவரது ஆதரவாளர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனிடையே ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் உள்ள மீனவ சமூகத்தினர், தொகுதியை அ.தி.மு.க.க்கு ஒதுக்குமாறு ஈபிஎஸ்-ஐ வலியுறுத்தி தொகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்; இதனால் அதிருப்தி தேர்தல் வாய்ப்பை பாதிக்குமோ என பா.ஜ. தரப்பில் கலக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




