திமுக கூட்டணிக் கட்சியான தொ.மு.ச. தலைவர் கி.நடராஜன், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட வரி மாற்றங்கள் மத்திய அரசு விதிமுறைகளின் அடிப்படையிலேயே செய்யப்பட்டவை என தெரிவித்தார். அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தேவையான நிதி தாமதமின்றி வழங்கப்படுவதால், அவை முன்பைவிட சிறப்பாக செயல்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், ஆய்வின் படி பெண்கள் மாதந்தோறும் ரூ.900 வரை சேமிக்க முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்துக்கான மானியத்தை அரசு வழங்குவதால் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி ஆதாரம் உருவாகிறது என்றும், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதுபோன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

மின்கட்டண உயர்வு குறித்து, மாநில அரசு ‘உதய்’ மின் திட்டத்தில் கையெழுத்திட்டதன் காரணமாக ஆண்டுதோறும் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மத்திய அரசு கூறுவதாக நடராஜன் விளக்கினார். அதன்படி வணிகம் மற்றும் தொழில்துறைக்கு மட்டும் சிறிய அளவில் உயர்த்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் ஆண்டுதோறும் சொத்து வரியை மாற்றினால்தான் மத்திய அரசின் மேம்பாட்டு நிதியை பெற முடியும் என்பதால், குறைந்த அளவில் சொத்து வரி உயர்த்தப்பட்டதாகவும், அது பா.ஜ. ஆளும் மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவெனவும் அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்த அதிமுக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக ஆட்சியில் தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். உதிரி பாகங்கள் பற்றாக்குறையால் பராமரிப்பு பாதிக்கப்பட்டு விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்ததாகவும், சென்னையில் தனியார் பங்களிப்புடன் இயக்கப்படும் பேருந்துகள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். இலவசப் பயணத் திட்டத்தை முன்னிறுத்தி, மறுபுறம் மின்கட்டணம் உள்ளிட்ட வரிகளை உயர்த்தி மக்கள் மீது சுமை ஏற்றப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.