சர்வதேச மருத்துவ இதழான லான்செட் வெளியிட்ட ஆய்வில், இந்தியாவில் பிரசவ கால தாய் இறப்பு விகிதம் 1990-ஐ ஒப்பிடுகையில் 2023ல் 77% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடு பிரிவு உள்ளிட்ட உலகளாவிய சுகாதார அமைப்புகளின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதன் முடிவுகளின்படி, இந்தியாவில் 1990ல் 1 லட்சம் பிரசவங்களுக்கு 508 தாய் மரணங்கள் இருந்த நிலையில், 2023ல் அது 116 ஆக குறைந்துள்ளது.

உலகளவில் 2023ல் தாய் மரணங்கள் சுமார் 2.40 லட்சம் என ஆய்வு மதிப்பிட்டுள்ளது; இது 1 லட்சம் பிரசவங்களுக்கு 190 என்ற அளவை குறிக்கிறது. 1990ல் இந்த விகிதம் 321 ஆக இருந்தது. இருப்பினும், 1 லட்சம் பிரசவங்களுக்கு 70-க்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்ற இலக்கை ஆய்வு செய்யப்பட்ட 204 நாடுகளில் 104 நாடுகள் இன்னும் எட்டவில்லை.

பிரசவத்திற்குப் பிந்தைய ரத்தப்போக்கு மற்றும் உயர் ரத்த அழுத்தம் தொடர்பான சிக்கல்கள் உலகளவில் தாய் மரணங்களுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன என்றும், கர்ப்ப கால பரிசோதனை, அவசர சிகிச்சை மற்றும் பிறப்பிற்குப் பிந்தைய கண்காணிப்பை மேம்படுத்தினால் தாய் மரணங்களை மேலும் குறைக்க முடியும் என்றும் ஆய்வு கூறுகிறது.

இதற்கிடையில், மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள், 2021–23 தேசிய தரவின்படி இந்தியாவின் தாய் இறப்பு விகிதம் 1 லட்சத்திற்கு 88 ஆக மேலும் குறைந்துள்ளதாகவும், 2030க்குள் ஐ.நா. நிர்ணயித்த 70 என்ற இலக்குக்குள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தனர்.