கேரள தேர்தலை முன்னிட்டு பாலக்காட்டில் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் இடதுசாரி முன்னணியும் தங்களின் கொள்கைகளை ஓட்டு வங்கி அரசியலை மையமாகக் கொண்டு அமைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
கோவையிலிருந்து பாலக்காடு சென்ற அவர் ரோடு ஷோ நடத்தினார். வழிநெடுகிலும் பாஜ மற்றும் என்டிஏ கூட்டணி தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.
பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்த இடங்களில் நிர்வாகம் சீர்குலைந்ததாக கூறினார். கர்நாடகாவில் வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன என்றும், இமாச்சலப் பிரதேசம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு, இதையே காங்கிரஸின் “ஆட்சி மாடல்” என விமர்சித்தார்.
மேற்காசிய போரின் தாக்கம் இந்தியாவில் குறைவாக இருக்க மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், போர் நடக்கும் நாடுகளின் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அங்கு சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக கூறிய அவர், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார்.
கேரளாவில் ஆட்சியமைப்பதற்காக பாஜ மற்றும் என்டிஏ தொடர்ந்து களத்தில் உழைப்பதாக கூறிய மோடி, கேரள மக்களின் கனவுகளை நனவாக்குவதே கூட்டணியின் இலக்கு என்றார். மேலும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கேரளாவுக்கு ஒதுக்கியதை விட தற்போது ஐந்து மடங்கு நிதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.




