புதுடில்லி: யு.ஜி.சி. (பல்கலை மானியக்குழு) மற்றும் என்.சி.இ.ஆர்.டி. (கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்) தொடர்பான சமீபத்திய விவகாரங்களில் எழுந்த சர்ச்சைகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

டில்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்டப் பிரிவு மாணவர்களுக்கு எதிரான பாகுபாட்டைத் தடுக்கும் நோக்கில் உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்தும் விதிமுறைகளை யு.ஜி.சி. கொண்டு வந்ததாக கூறினார். ஆனால், அந்த விதிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்கப்படுவதையோ பாதிப்பு ஏற்படுவதையோ அரசு ஆதரிக்காது என்றும், எந்த வடிவிலான பாகுபாடும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வது அரசியலமைப்பு கடமை என்றும் அவர் கூறினார். இருப்பினும், விவகாரம் நீதிமன்ற பரிசீலனையில் இருப்பதால் இதுகுறித்து மேலும் கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.

மேலும், என்.சி.இ.ஆர்.டி. 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்த ‘நீதித்துறையில் ஊழல்’ என்ற தலைப்பிலான பாடப்பகுதியை முழுமையாக நீக்கியதாக தெரிவித்தார். அதற்குப் பதிலாக, நீதிமன்றத்தின் மேற்பார்வையில் முறையாக கண்காணிக்கப்படும் வகையில் புதிய அத்தியாயம் சேர்க்கப்படும் என்றும், நீதித்துறையை அவமதிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து உயர் நிலைப் பள்ளிகளிலும் இணைய சேவை வழங்கப்படும்; செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) சார்ந்த கல்வி அறிமுகப்படுத்தப்படும்; மேலும் 19 வெளிநாட்டுப் பல்கலைகளின் கிளைகள் இந்தியாவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.