சென்னை: தேமுதிக அங்கீகரிக்கப்படாத கட்சி என இபிஎஸ் கூறியதாக எழுந்த கேள்விக்கு, அதற்கு தன்னிடம் நேரடி பதில் இல்லை என்றும், அவர் ஏன் அப்படி சொன்னார் என்பதை அவரிடமே கேட்க வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் பிரேமலதா தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விருத்தாசலம் தேமுதிகவின் கோட்டை என்றும், விஜயகாந்துக்கு முதல் வெற்றியை அளித்த தொகுதி அதுவே என்றும் கூறினார். இந்தாண்டு மாநாட்டு நடவடிக்கைகளை முதலில் விருத்தாசலத்தில் தொடங்கியதாகவும், தேமுதிகவும் விருத்தாசலமும் ஒன்றே என்ற அளவுக்கு அந்த இணைப்பு வலுவானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக, முன்பு எம்எல்ஏக்களாக இருந்த மூவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், புதியவர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறினார். பிரதாப், விஜயபிரபாகரன் ஆகிய இரு இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். பார்த்தசாரதி, நல்லதம்பி ஆகியோருக்காக அவர்கள் முன்பு வென்ற விருகம்பாக்கம், எழும்பூர் தொகுதிகளை கேட்டதாகவும், ஆனால் இந்த முறை சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களே இருப்பார்கள் என்று முன்கூட்டியே கூறப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

இதில் மனவருத்தம் இல்லை என்றும், தேமுதிக வெற்றி பெற்றாலும் கூட்டணி தரப்பு தங்களுடன் இணைந்து பணியாற்றும் என்றும் அவர் கூறினார். பல்லாவரம் தொகுதி அனகை முருகேசனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் முன்பு செங்கல்பட்டில் வென்றவர் என்றாலும் இம்முறை பல்லாவரத்தில் போட்டியிடுவதாகவும் குறிப்பிட்டார். கிடைத்த தொகுதிகளை மனப்பூர்வமாக ஏற்று, மக்களுக்காகவே பணியாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், ‘தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை’ என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், தேமுதிக உலகம் அறிந்த மூன்றாவது அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றும், அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால்தான் பல தொகுதிகளில் ‘முரசு’ சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றும் கூறினார்.