கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் உள்ள அழுக்கு சாமியார் கோவிலுக்கு புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி சென்று சிறப்பு பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தே.ஜ. கூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர்களை காகிதத்தில் எழுதி, அதை தெய்வப் படத்தின் முன் வைத்து அவர் வழிபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கோவிலில் சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்த பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டார். செய்தியாளர்களிடம் குறுகியதாக பேசிய அவர், “எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றார்.

த.வெ.க தலைவர் விஜய் குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மவுனமாக சென்றார். இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலுக்கும் சென்று அவர் வழிபட்டார்.