2026 சட்டமன்றத் தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் செங்கோட்டையன் 9வது முறையாக போட்டியிடுகிறார். இதுவரை அதிமுக வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் 8 முறை வென்ற அவர், இம்முறை தவெக சார்பில் ‘விசில்’ சின்னத்தில் களம் இறங்குகிறார்.
தேர்தல் பணிகளில் முக்கிய கட்சிகள் வேகம் எடுத்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரத்தை தொடங்கியுள்ளார். முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மார்ச் 31 அன்று திருவாரூரில் பிரசாரத்தை தொடங்க உள்ளார். வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி செங்கோட்டையனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் உடனான மோதல் போக்குக்குப் பின்னர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அதே தொகுதியில் புதிய கட்சி அடையாளத்துடன் மீண்டும் களம் காண்கிறார்.
அவரின் மொத்த அரசியல் பயணத்தை கணக்கிட்டால், 2026 தேர்தல் 10வது போட்டியாகும். 1977ல் சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து அதிமுக எம்எல்ஏவாக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பின்னர் நீக்கப்பட்ட அந்தத் தொகுதியைத் தொடர்ந்து கோபிச்செட்டிப்பாளையத்தில் 8 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
விஐபி தொகுதியாகக் கருதப்படும் கோபிச்செட்டிப்பாளையத்தில் நான்குமுனை போட்டி நிலவுகிறது. அதிமுக சார்பில் வி.பி. பிரபு அறிவிக்கப்பட்டுள்ளார்; திமுக வேட்பாளராக நல்லசிவம் களமிறங்குகிறார்; நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார்; தவெக சார்பில் செங்கோட்டையன் போட்டியிடுகிறார்.




