கர்நாடக முதல்வர் சித்தராமையா மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். கேரளாவின் வயநாடு பகுதிக்கு கர்நாடக அரசு ₹10 கோடி நிதியை ஒதுக்கியதுதான் இதற்குக் காரணம்.

2024ல் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மறுவாழ்வுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டிலும் வயநாட்டுக்கு ₹10 கோடி உதவி வழங்கியதாகவும், அடுத்த மாநிலத்திற்கு உதவுவது கடமை எனவும் சித்தராமையா கூறியுள்ளார்.

ஆனால் கர்நாடக அரசின் நிதிநிலை மோசமாக இருப்பதாக முதல்வரே கூறியுள்ள நிலையில், ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கப்படாதது, தெரு சீரமைப்புக்கு நிதி இல்லை, அரசு மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாடு, துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க சிரமம் போன்ற பிரச்னைகள் உள்ளபோது ஏன் இந்த உதவி என பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி என்பதால் இந்த தாராளம் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் 2023ல் வயநாட்டில் காட்டு யானை தாக்குதலில் ஒரு விவசாயி உயிரிழந்தபோது ₹15 லட்சம் உதவி அறிவிக்கப்பட்டது; ஆனால் அந்த தொகை வழங்கப்படவில்லை என கேரள அமைச்சரே கூறியதாகவும், பின்னர் குடும்பம் உதவியை மறுத்ததால் அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதாகவும் செய்தி குறிப்பிடுகிறது.