பெற்றோருக்கு ஆதரவு உறுதி செய்யும் நோக்கில், தெலுங்கானா சட்டசபையில் புதிய மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பெற்றோரை புறக்கணிப்பதாக உறுதி செய்யப்படும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை பிடித்தம் செய்து, அந்த தொகையை பெற்றோருக்கே நேரடியாக வழங்கும் ஏற்பாடு இதில் முன்வைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா ஊழியர்களின் பொறுப்புடைமை மற்றும் பெற்றோர் ஆதரவு கண்காணிப்பு மசோதா – 2026 என்ற பெயரில், மாநில ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன் மற்றும் முதியோர் நலத்துறை அமைச்சர் அட்லூரி லட்சுமண் குமார் மசோதாவை அறிமுகப்படுத்தினார். மாநிலத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
மசோதாவின் படி, பெற்றோர் புறக்கணிப்பு தொடர்பான புகார்களை விசாரிக்க நிறுவனங்களில் நியமன அதிகாரி அமைப்பை மாநில அரசு உருவாக்கும். பெற்றோர் மனு அளிக்கலாம்; இதற்கான அதிகாரியாக சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் நியமிக்கப்படுவார். மேல்முறையீட்டு அமைப்பாக முதியோர் நல ஆணையம் செயல்படும்; சட்ட விதிகள் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க மாநில அளவிலான கண்காணிப்பு அமைப்பும் உருவாக்கப்படும்.
புறக்கணிக்கப்படும் பெற்றோர், சம்பந்தப்பட்டவரின் மாதச் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தங்களுக்கு ஒதுக்கக் கோரி எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்கலாம். தங்களுக்கு போதுமான வருமானம் இல்லை என்றும், வாரிசுகளிடமிருந்து நிதியுதவி தேவை என்றும் அவர்கள் நிரூபிக்க வேண்டும். நியமிக்கப்பட்ட அதிகாரி 60 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்; தாமதமானால் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்யலாம், அதிலும் 60 நாட்களுக்குள் தீர்மானம் எடுக்க வேண்டும்.
பெற்றோர் புறக்கணிப்பு உறுதி செய்யப்பட்டால், மாதந்தோறும் ரூ.10,000 அல்லது சம்பளத்தின் 15 சதவீதம் பிடித்தம் செய்து பெற்றோருக்கு நேரடியாக வழங்கப்படும் என மசோதா கூறுகிறது. விசாரணை காலத்தில் பெற்றோர் மனுவை அல்லது மேல்முறையீட்டை திரும்பப் பெறவும், சம்பளப் பங்கீடு உத்தரவை ரத்து செய்ய கோரவும் வாய்ப்பு உள்ளது. பெற்றோரில் ஒருவர் அல்லது இருவரும் உயிரிழக்கும் சூழலில் தொகை மாற்றம் அல்லது பிடித்தம் ரத்து தொடர்பான நடைமுறைகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசு, தனியார் ஊழியர்கள் மட்டுமின்றி எம்.எல்.ஏ., எம்.எல்.சி., உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இது பொருந்தும் என்றும், மசோதா விரைவில் சட்டமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




