தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்காக அறிவிக்கப்பட்ட சில திட்டங்களுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவை பின்னர் ரத்து செய்யப்பட்டதால் அந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வராமல் உள்ளன.
அமலாகாத அறிவிப்புகளில், மாவட்டங்களில் மனை மேம்பாட்டு திட்டம் மூலம் மனைகள் உருவாக்குவது மற்றும் நகரங்களின் முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் தேவைக்கேற்ப வணிக வளாகங்கள் கட்டுவது உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
சென்னை லாயிட்ஸ் காலனியில் ரூ.451 கோடி மதிப்பில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மறுமேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளும் திட்டமும் பட்டியலில் உள்ளது. மேலும், வாரியத் திட்டப் பகுதிகளில் குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கு உதவும் வகையில் திட்ட நிதியில் இருந்து ‘கார்பஸ் பண்டு’ உருவாக்கும் அறிவிப்பும் அமலாகவில்லை.
வாரியத் திட்டங்களில் கிடைக்கும் லாபத்தில் 2% ஒதுக்கி நலிந்த பிரிவினருக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த சி.எஸ்.ஆர். நிதி உருவாக்குவது, பொருளாதாரத்தில் நலிவுற்ற/குறைந்த வருவாய்/நடுத்தர வருவாய் பிரிவினருக்கான தவணை முறை வீடு வாங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது போன்ற அறிவிப்புகளும் நடைமுறைக்கு வராததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பொது-தனியார் பங்களிப்பில் திருமழிசை திட்டப் பகுதியில் 16.92 ஏக்கரில் ரூ.1,280 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் அமைப்பது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 125 மேம்படுத்தப்பட்ட மனைகளில் ரூ.59 கோடியில் குடியிருப்புகள் கட்டுவது, ஈரோடு சம்பத் நகரில் ரூ.34 கோடியில் அடுக்குமாடி வீடுகள் கட்டுவது, சென்னை முகப்பேர் மற்றும் காஞ்சிபுரம் பல்லவன் நகரில் தனியாருடன் இணைந்து கூட்டு முறையில் அடுக்குமாடி வீடுகள் கட்டுவது ஆகிய அறிவிப்புகளும் அமலுக்கு வரவில்லை.




