த.வெ.க. தலைவர் விஜய், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து புகார் மனு அளிப்பதற்காக சனிக்கிழமை மதியம் சென்னை தலைமை செயலகத்துக்கு சென்றார்.
மதியம் 2.50 மணியளவில் விஜய் தலைமை செயலகம் வந்தார். அவருடன் செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. விஜய் திடீரென வந்ததால், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடக கேமராமேன்கள் அதிக அளவில் குவிந்தனர்.
தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்த பின்னர், விஜய் சுமார் மூன்று நிமிடங்கள் பேசினார். அதன் பிறகு அவர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், விஜயின் பிரசாரத்திற்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். சென்னை ஹோட்டலில் நடத்த திட்டமிட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதாகவும், பிரசாரம் நடைபெறவிருந்த இடத்தில் தடுப்பு வேலிகள் அமைத்து குழி தோண்டப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர், டி.ஜி.பி. உள்ளிட்டோர் தி.மு.க.க்கு ஆதரவாக விஜயின் பயணத்தை முடக்க முயற்சிப்பதாக அவர் கூறினார். பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளை மாற்ற வேண்டும் எனக் கோரி விஜய் மனு அளித்ததாகவும், மேற்கு வங்கத்தில் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை மாற்றியதை உதாரணமாகவும் அவர் குறிப்பிட்டார்.




