மேற்கு ஆசியாவில் நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுடன் நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஈரான், பாகிஸ்தான் அரசு வழியாக அமெரிக்காவுக்கு தகவல் அனுப்பியுள்ளதாக பாகிஸ்தான் துாதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிப். 28 அன்று அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது போரைத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போரை நிறுத்தும் அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஈரான் முன்வைக்கும் நிபந்தனைகளில் உடனடியாக தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதும், எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என்பதற்கான உறுதியான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பதும் அடங்கும்.
பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் இஸ்லாமாபாத் வழியாக முன்னெடுக்கப்படுகின்றன. சவுதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளும் இதில் பங்கேற்று அமெரிக்காவிடம் ஈரானின் கவலைகளை எடுத்துரைக்க உள்ளன. இந்த நான்கு நாடுகளின் கூட்டம் நேற்று இஸ்லாமாபாத்தில் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் ஈரான் முன்வைத்த நிபந்தனைகள் குறித்து ஆலோசித்து பேச்சுக்கான திட்டம் வகுக்கப்படும் என்றும், அமெரிக்காவிடமிருந்து நம்பத்தகுந்த உத்தரவாதம் கிடைத்தால் ஏப். 7க்குள் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் துாதரக வட்டாரங்கள் கூறியுள்ளன.




