புதுடில்லி: நக்சல் இயக்கத்தை முற்றிலும் ஒழிக்க மார்ச் 31க்குள் இலக்கு நிர்ணயித்துள்ள மத்திய அரசின் காலக்கெடு நிறைவடைய உள்ள நிலையில், நக்சல் செயல்பாடுகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் குறித்து லோக்சபாவில் இன்று குறுகிய கால விவாதம் நடத்தப்பட உள்ளது.
சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிஷா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட நக்சல் ஆதிக்கம் அதிகமாக இருந்த மாநிலங்களில் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளில் பல நக்சல் தலைவர்கள் கொல்லப்பட்டதால், இயக்கத்தின் செயல்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், பலர் ஆயுதங்களை ஒப்படைத்து போலீசில் சரணடைந்து வருகின்றனர். சரணடைந்தவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மறுவாழ்வு திட்டங்கள் மூலம் வீடு, உதவித்தொகை உள்ளிட்ட ஆதரவுகளை வழங்கி வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் 10,000க்கும் மேற்பட்ட நக்சல்கள் சரணடைந்துள்ளதாக செய்தி குறிப்பிடுகிறது. இதையடுத்து, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை விவாதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
லோக்சபாவில் விதி எண் 193ன் கீழ், எம்.பி.க்களின் ஓட்டெடுப்புக்கு உட்படாத வகையில் இந்த குறுகிய கால விவாதம் நடைபெறும். இருப்பினும், விவாதத்திற்கு மத்திய அரசு தரப்பில் பதிலளிப்பது அவசியமாகும்.




