புதுடில்லி: மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலால் உருவான சவால்களை எதிர்கொள்ள நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். மாதந்தோறும் ஒலிபரப்பாகும் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் அவர் இதை வலியுறுத்தினார்.
மேற்காசிய நாடுகளில் சுமார் ஒரு மாதமாக போர் நீடிப்பதாகவும், அங்கு இந்தியர்கள் பலர் வசித்து பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். போரால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை அந்நாடுகள் வழங்கி வருவதாக கூறி, அதற்காக நன்றியும் தெரிவித்தார்.
இந்த போர் நடைபெறும் பகுதி இந்தியாவின் எரிபொருள் தேவைகளுக்கு முக்கியமான கேந்திரமாக இருப்பதால், உலகளவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார். இதனால் மக்கள் வதந்திகளை நம்பாமல், அரசு வழங்கும் தகவல்களை மட்டுமே நம்பி முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது; இது 140 கோடி மக்களின் நலன் தொடர்புடையது என்றும் அவர் கூறினார். அதே உரையில் ‘கியான் பாரதம்’ சர்வே திட்டத்தைப் பற்றியும் விளக்கி, பழங்கால ஓலைச்சுவடிகள், இலக்கிய பிரதிகள் போன்ற வரலாற்று ஆவணங்கள் இருந்தால் மொபைல் செயலி மூலம் புகைப்படத்துடன் பகிருமாறு கேட்டுக்கொண்டார்.
சர்வதேச யோகா தினத்திற்கு இன்னும் 100 நாட்களே உள்ளதாக நினைவூட்டி, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். சர்க்கரை உட்கொள்ளுதலை குறைக்கவும், சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைக்கவும் கூறி, இது உடல் பருமன் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களைத் தவிர்க்க உதவும் என்றார்.




