நேபாளத்தில் கடந்தாண்டு நடந்த இளந்தலைமுறையினர் போராட்டத்தின் போது உயிரிழந்த 27 மாணவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு செப்டம்பரில் நடந்த இந்தப் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், 27 மாணவர்கள் உட்பட மொத்தம் 76 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இம்மாதம் 5ஆம் தேதி நேபாளத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மாணவர் அமைப்புடன் தொடர்புடைய தேசிய சுதந்திர கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது.

இதையடுத்து பாலேந்திர ஷா புதிய பிரதமராக பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள், உயிரிழப்புகள் தொடர்பான விவகாரத்தில் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சூழலில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை மற்றும் கூடுதல் நிவாரணம் வழங்கும் முடிவு, புதிய நிர்வாகம் எடுத்துள்ள அடுத்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.