மேற்காசியாவில் நிலவும் பதற்றங்கள் மற்றும் மோதல்களை தணிக்கும் வழிகள் குறித்து விவாதிக்க பாகிஸ்தான், இஸ்லாமாபாதில் இரண்டு நாள் உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஆலோசனைகளில் பங்கேற்க சவுதி அரேபியா, எகிப்து மற்றும் துருக்கியைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் பாகிஸ்தான் வந்தடைந்துள்ளனர். மாநாடு நேற்று தலைநகரில் தொடங்கியது.

எகிப்து வெளியுறவு அமைச்சர் பத்ர் அப்தெலாட்டி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் பிடான் ஆகியோர் நேற்று முன்தினம் பாகிஸ்தான் வந்தனர். சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் நேற்று வந்தடைந்தார்.

உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர், எகிப்து மற்றும் துருக்கி அமைச்சர்களுடன் தனித்தனியாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். சவுதி அமைச்சருடனும் தனியாக பேச்சு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வருகை தந்துள்ள அமைச்சர்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பையும் சந்தித்து பேச்சு நடத்துவார்கள் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.