சென்னை: ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு அளிக்கப்படும் மனுக்களை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் முடிக்காமல் வருவாய் துறை அதிகாரிகள் நிராகரிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

பட்டா பெயர் மாற்றம் போன்ற சேவைகளை எளிமைப்படுத்த அரசு www.tnesevai.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. பொதுமக்கள் நேரடியாகவும், இ-சேவை மையங்கள் வழியாகவும் மனுக்கள் பதிவு செய்யலாம்; அவற்றில் 30 நாட்களுக்குள் முடிவு எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் பல இடங்களில், 30 நாட்கள் வரை நடவடிக்கை எடுக்காமல் இருந்து, கடைசியில் ‘தேவையான கூடுதல் விபரங்கள் இல்லை’ என கூறி மனுக்களை அமைதியாக நிராகரித்து விடுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை உருவாகிறது எனவும் கூறப்படுகிறது.

இதே போக்கு தற்போது ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்ட மனுக்களிலும் தொடர்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவையர், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகாத பெண்கள், இலங்கை அகதிகள் உள்ளிட்டோருக்கான திட்டங்கள் மற்றும் முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் போன்றவற்றுக்கான மனுக்கள் வருவாய் துறையின் வழியாகவே செல்கின்றன.

கிராமப்புறங்களில் பலர் விண்ணப்பங்களை பதிவு செய்ய இ-சேவை மையங்களை நம்பி, கட்டணம் செலுத்தி மனுக்கள் அளிப்பதாகவும், நிராகரிப்பு தகவல் உடனடியாக தெரிவிக்கப்படாமல் சில மாதங்கள் கழித்து தாலுகா அலுவலகத்தில் விசாரிக்கச் சென்றபோதுதான் மனு நிராகரிக்கப்பட்டது தெரியவருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.