தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் என்று திமுக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திருவாரூர் தெற்கு ரத வீதியில் மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிப்பார் என கூறப்பட்டுள்ளது.

ஏப்.1 காலை 9 மணிக்கு திருச்சி உழவர் சந்தையில் நடைபெறும் கூட்டத்தில், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, முசிறி, துறையூர் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். அதே நாள் மாலை 5 மணிக்கு கரூரில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று, அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதிகளுக்கான வாக்கு சேகரிப்பார்.

ஏப்.2 காலை 9 மணிக்கு ஈரோட்டில் நடைபெறும் கூட்டத்தில், பவானிசாகர், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், ஈரோடு கிழக்கு, பவானி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வார். பின்னர் மாலை 5 மணிக்கு கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், சூலூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றுவார் என திமுக தெரிவித்துள்ளது.