சென்னை: ஏப்.23 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், தேசிய அரசியலில் செயல்பட்டு வந்த இரண்டு தற்போதைய எம்பிக்கள் போட்டியிட உள்ளனர்.
அவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுக ஏற்கனவே தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது; திமுக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சி.வி.சண்முகம் 2001, 2006 தேர்தல்களில் திண்டிவனம் தொகுதியிலும், 2011, 2016 தேர்தல்களில் விழுப்புரம் தொகுதியிலும் வெற்றி பெற்றவர். ஜெயலலிதா மற்றும் இபிஎஸ் ஆட்சிகளில் அமைச்சராக இருந்து கல்வி, சட்டத் துறைகளை கவனித்தார். 2021 தேர்தலில் விழுப்புரத்தில் தோல்வியடைந்த பின்னர், 2022 ஜூனில் ராஜ்யசபா எம்பியாக ஆனார். இம்முறை மயிலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
திருமாவளவன் 2001 சட்டசபை தேர்தலில் மங்களூர் தொகுதியில் வெற்றி பெற்று 2004 வரை பதவியில் இருந்தார்; பின்னர் ராஜினாமா செய்தார். 2016ல் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சிதம்பரம் லோக்சபா தொகுதியில் 1999, 2004ல் தோல்வியடைந்த அவர், 2009ல் வெற்றி பெற்றார்; 2014ல் தோல்வியடைந்து, 2019 மற்றும் 2024ல் மீண்டும் வெற்றி பெற்றார். தற்போது அவர் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு போட்டியிடுகிறார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடினும், இருவரும் இதுவரை எம்பி பதவியை ராஜினாமா செய்யவில்லை. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு அதுகுறித்து முடிவு எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




