ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இதுவரை வான்வழி தாக்குதல்களையே மேற்கொண்ட அமெரிக்கா, தரை வழி தாக்குதலுக்கான திட்டங்களை தயாரித்துள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியதன்படி, கார்க் தீவு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி அருகிலுள்ள கடற்கரை பகுதிகளை மையமாகக் கொண்டு தாக்குதல் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் சிறப்பு படைகள் மற்றும் சாதாரண படையினரும் பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், கார்க் தீவு உள்ளிட்ட முக்கிய இடங்களை கைப்பற்றி, கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் ஆயுதங்களை கண்டறிந்து அழிக்கும் நோக்கமும் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

இந்த திட்டங்கள் அவசரமாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்கூட்டியே ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு நிலைகளில் சோதிக்கப்பட்டவை என்றும் அவர்கள் விளக்கினர். தரை வழி தாக்குதல் சில வாரங்களிலிருந்து சில மாதங்கள் வரை நீடிக்கக்கூடும் என்றும், இதற்கான திட்டங்களுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் அமெரிக்க ராணுவத்தினர் 500க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்ததாக கூறப்படும் இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தாக்குதல் தொடர்பான தகவலை அமெரிக்கா இதுவரை உறுதிப்படுத்தவில்லை.