வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் மாடவீதிக்கு அருகே அனுமதியின்றி திறக்கப்பட்டதாக கூறப்படும் சர்ச், பொதுமக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து மூடப்பட்டது.

அப்பகுதியில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் அருகே, அதிகார அனுமதி இல்லாமல் சர்ச் கட்டுமானம் நடைபெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹிந்து முன்னணி சார்பில் போலீசில் முன்பே புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நேற்று காலை அந்த இடத்தில் அனுமதியின்றி பிரார்த்தனை கூட்டம் நடந்ததாக தகவல் வெளியானதும் பொதுமக்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சர்ச் நிர்வாகத்தினருக்கும் எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் சர்ச் மூடப்பட்டது. வேலூர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, இனி கோவில் அருகே சர்ச் செயல்படாது என அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக கூறினார்.